உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 1 முதல் 29 வரையிலான 29 நாளில் 30 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.

2008 ம் ஆண்டு உடலுறுப்பு தானத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த மாதம் சராசரியாக ஒருநாளுக்கு ஒரு உறுப்பு தானம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று 2023 செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து உடலுறுப்பு தானம் அதிகரித்து வருவது தரவுகள் மூலம் தெரியவருகிறது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் தலா 4 பேர் இந்த மாதம் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.

இந்த மாதம் நடைபெற்ற மொத்த உறுப்பு தானத்தில் 50 கருவிழிகள், 48 சிறுநீரகம், 27 கல்லீரல் உள்ளிட்ட மொத்தம் 189 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

இதில் அரசு மருத்துவமனைகள் தவிர சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் பங்களிப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.