உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உ.பி. மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என்று ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும் அகவிலைப்படி கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க 2020 ம் ஆண்டு வழங்கப்படவில்லை.

அதுவரை, 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி 28 ஜூலை 2021 ல் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், அகவிலைப்படியை ஜூலை 2021 முதல் மேலும் 3 சதவீதம் உயர்த்தி மொத்தம் 31 சதவீத அகவிலைப்படி வழங்குவதாக அறிவித்துள்ளது,

இந்த புதிய உயர்வு தொகை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அரசு, இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்களும் 12 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.