சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடி உட்பட 3 புதிய மாவட்டங்களை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவையில் உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரையுடன் நாளைய பேரவை நிகழ்வு நிறைவடையும். பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவலர் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீது விவாதம் நடத்துவதற்கு எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். இறுதியாக ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும், முதலமைச்சரும் பதில் அளிப்பர்.
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, சபாநாகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் மீது விவாதம் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இத்தகைய சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 3 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியையும், கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியையும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தையும் பிரித்து, புதிய மாவட்டங்களாக அவை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கும் திட்டமும் அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.