சென்னை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஒரு மாணவி உட்பட மூவர் சிக்கி உள்ளனர்.

தேனி மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த மாணவர் உதய் சூர்யா குறித்த விவரங்கள் வெளியானதும் அவர் தனது தந்தை வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் உடன் தப்பி ஓடி விட்டார். திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வெங்கடேஷ் ஆள்மாறாட்டம் செய்ய ஒரு இடைத்தரகருக்கு ரூ.20 லட்சம் அளித்ததைத் தெரிவித்தார்.  மேலும் அவர்களிடம் நடந்த விசாரணையில்  இது போல் 5 பேர் வரை ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்துள்ளது.    இது குறித்து கல்லூரிகளில் நடந்த சிபிசிஐடியினர் விசாரணையில் மேலும் மூவர் சிக்கி உள்ளனர்.

இவ்வாறு சிக்கிய மாணவி அபிராமி சென்னை திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.   மேலும் பிரவீன் என்னும் மாணவர் எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியிலும் ராகுல் என்னும் மாணவர் பாலாஜி மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்.  இந்த மூன்று மாணவர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரிடமும் நேர்று இரவு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்தது.  அந்த விசாரணையில் மூவரும் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.   இவர்களுக்குப் பதிலாக உத்திரப் பிரதேசம் மற்றும் டில்லியில்  மூவர் தேர்வு எழுதியதாகவும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் அளித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிபிசிஐடி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “பல்வேறு சோதனைகளுடன் நடந்த நீட் தேர்வின் போது ஹால் டிக்கெட் வழங்கும் போதும், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்டத்தைக் கவனிக்காமல் விட்டது எப்படி என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.   .

சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதால் அவர்களுக்குச் சம்மன் அனுப்ப உள்ளோம்.. மாணவர் உதித்சூர்யா மற்றும் சந்தேகத்துக்கு உள்ளான சில மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தியவர்கள் யார் மற்றும்  மாணவர் சேர்க்கை நடத்தியது யார் போன்ற விவரங்களைக் கேட்டு அறிய உள்ளோம்” எனக் கூறி உள்ளார்.