பா.ஜ.க.உறவுக்கு அ.தி.மு.க.கூட்டணியில் எதிர்ப்பு… 3 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம்

பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. உடன்பாடு கண்டிருப்பதை தம்பிதுரை,பொன்னையன் ஆகியோர் ஏற்கவில்லை.பகிரங்கமாக இருவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் சில எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள்,பொது வெளியில் தங்கள் குமுறலை காட்டிக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

எனினும் அ.தி.மு.க.கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு,தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் –அ.தி.மு.க.தலைமை மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். மூவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

தமிமுன் அன்சாரி- மனிதநேய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனி  கட்சி நடத்தி வருகிறார்.நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.

‘’அ.தி.மு.க.-பா.ஜ.க.கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானால் அந்த நிமிடமே கூட்டணியில் இருந்து விலகி விடுவேன்’’ என எச்சரித்துள்ளார் இவர்.

ஏன்?

அன்சாரியே விளக்கம் அளிக்கிறார்:

‘’இந்த கூட்டணி தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரான கூட்டணி. எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் கட்டிக்காத்து வந்த சிறுபான்மை ஓட்டுகளை பா.ஜ.க.கூட்டணி சிதைத்து விடும் என்று அ.தி.மு.க.தலைமையிடம் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.அதையும் மீறி ஒப்பந்தம் செய்து கொண்டால் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோகும்.பா.ஜ.க.உறவு- தோல்வியை வலிந்து விலைக்கு வாங்கும் முயற்சி’’என்றவர் தொடர்ந்து பேசினார்:

‘’மாநிலஅமைச்சர்கள்,எம்.பி.க்கள் பலருக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை.தங்கள் அதிருப்தியை அவர்கள் எங்களிடம் வெளிப்படுத்தி வருகிறார்கள்’’

என்கிறார்-அன்சாரி.

இதே கருத்தை பிரதிபலித்தார்-கொங்கு இளைஞர் பேரவையின்-தனியரசு.’’பா.ஜ.க.கூட்டணியை ,அ.தி.மு.க.மறு பரிசீலனை செய்ய வேண்டும்.’’என்றார் அவர்.

முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ் .சட்டப்பேரவையில் சில தினங்களுக்கு முன்பு பேசும்போது’ அ.தி.மு.க.அரசுக்கு தனது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும்’’ என்று அறிவித்தார்.

அச்சில் பதிவான அவரது வார்த்தைகளின் ஈரம் காயும் முன்பாக –அவரும் போர்க்குரல் எழுப்பியுள்ளார்.

‘’’கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா ‘’மோடியா? லேடியா? என்று முழக்கம் இட்டு 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தார்.ஜெயலலிதா வழியில் செல்வதாக கூறிக்கொள்ளும் அ.தி.மு.க,இப்போது-அவரது எண்ணங்களுக்கு மாறாக செயல் படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ‘’என்று குமுறுகிறார் –கருணாஸ்.

—பாப்பாங்குளம் பாரதி