சென்னை:

சகிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால் இரு அணிகளின் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக அறிவித்தனர்.

இதற்கு ஏதுவாக டிடிவி தினகரன் குடும்பத்தாரை கட்சியில் இருந்து நீக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் அறிவித்தனர். எனினும் சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், சசிகலா பதவி தொடர்பான பிரச்னை தேர்தல் கமிஷனின் விசாரணையில் இருப்பதாக எடப்பாடி அணியினர் கூறி வந்தனர்.

இத்தகைய கோரிக்கைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடப்பதற்கான சூழ்நிலை ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 3 பேர் கலந்துகொண்டுள்ளனர். சமீபத்தில் மாரடைப்பால் இறந்த சசிகலா அண்ணன் மகன் மகாதேவனின் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

சசிகலா கணவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏக்கள் ரெங்கசாமி, கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் திவாகரனும் கலந்து கொண்டார். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் அதிமுகவின் இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயண திட்டத்தை அறிவித்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.