குவாலியர்

த்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் செயற்கை பால் தயாரிக்கும் 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பால் முக்கிய உணவாகும். அரசு பால் விநியோகம் மட்டுமின்றி ஏராளமான தனியார் பால் நிறுவனங்களும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாடுகளை வைத்து கறந்து விற்போர் தண்ணீரை அதிகம் கலப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் மக்கள் பாக்கெட் பாலை வாங்கி வருகின்றனர். இந்த பால் குறித்து அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் செயற்கையாக பால் தயாரிக்கும் 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலைகளில் ஒரு லிட்டர் பாலில் 30% உண்மையான பாலுடன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், திரவ சோப்பு, வெள்ளை பெயிண்ட் மற்றும் குளூக்கோஸ் கலந்து செயற்கைப் பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே முறையில் பனீர் மற்றும் பால் கோவாவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால் பிரபல பால் நிறுவனங்களில் போலி முத்திரையுடன் பெக் செய்யப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் டில்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 10000 லிட்டர் பால், 500 கிலோ பால் கோவா மற்றும் 200 கிலோ பனீர் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த செயற்கைப் பால் தயாரிப்பில் உதவி புரிந்த 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தவிர 20 டேங்கர்கள் 11 பிக் -அப் வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன். மேலும் துணி சலவை செய்யும் திரவ சோப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் குளுக்கோஸ் தூள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்று தொழிற்சாலைகளில் நாள் முழுவதும் அதாவது24 மணி நேரமும் 7 நாட்களும் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இவ்வாறு தினமும் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த செயற்கை பால் உற்பத்தி கும்பலுக்கு உணவு ஆய்வாளர்கள் உதவி வருவதாக கூறப்படுகிறது.