கோவில்பட்டி: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20ம் தேதி இரவு நேரத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாக கூறி அவரையும், தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றதாகக் கூறப்படுகின்றது.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகு கணேஷ் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப்போக்கு ஏற்படுத்தியதோடு, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவ சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழக்க, தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. காவல்துறைக்கு எதிரான கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. அதை தொடர்ந்து, வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர்.
அதே நேரத்தில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில், கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடற்கூறாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.