சென்னை: தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் 3 நாள் முகாமிடும் சசிகலா, அங்கு முக்குலத்தோர் சமூதாய தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். அதற்காக, இன்று அதிமுக கொடி பொருத்திய காரில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

அதிமுகவை தற்போது வழிநடத்தி வரும் இரட்டை தலைமைகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால், சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.  இதை காரணமாக கொண்டு, அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. அதிமுவின் உள்ள அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

அதன்படி, தற்போது முதல்கட்ட பயணணத்தை இன்று தொடங்கி உள்ளார். ஏற்கனவே அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டையொட்டி, எம்ஜிஆர் ஜெ சமாதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி அதகளம் செய்த நிலையில்,  தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளார். அதிமுக கொடி பொருத்திய, ஜெயலலிதாவின் காரில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.  இன்று தஞ்சை செல்லும் அவர்,  தொடர்ந்து மதுரையில் சில நாட்கள் முகாமிட்டு தொண்டர்களை சந்திப்பை நடத்தவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை  சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் தொண்டர்களின் உற்சாக கரகோஷத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.  இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

28ம் தேதி, மதுரை சென்று முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, 29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்த பின், 30ந்தேதி  பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் பங்கேற்றுவிட்டு, தொண்டர்களை சந்திக்கிறார்.

அதைத்தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி,  முக்குலத்தோர் மதுரையில் கூடுவார்கள் என்பதால், அவர்களின் ஆதரவை பெரும் திட்டத்தில், மதுரையில் 3  நாட்கள் முகாமிடுகிறார். அப்போது அதிருப்தியாளர்கள் உள்பட பல்வேறு தேவர் சமுதாய தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் பல ஆண்டுகளாகவே, முக்குலத்தோர் அணியினரும்,  கொங்கு அணியினரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது முக்குலத்தோரை தனது ஆதரவாளராக மாற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளதும், தேவர் குருபூஜையை சாதகமாக்கி 3 நாட்கள் மதுரையில் முகாமிட்டு, ஜாதிய ரீதியிலாக ஆதரவை கோர இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர்  நவம்பர் 1ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் அவர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து ஓபிஎஸ் கூற, அதற்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பி, மாறுபட்ட கருத்து நிலவும் சூழலில், சசிகலாவின்  சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு