டில்லி:

விபத்து மற்றும் பிறவி ஊனத்தை மறைக்கும் வகையிலும், அவர்களும் மற்றவர்களை போல் இயல்பான தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை உடல் உறுப்புகள் பொருத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

இந்தியாவுக்கு இந்த செயற்கை உறுப்புகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தவகல் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரம்….

உயர்தர செயற்கை உடல் உறுப்புகள் மலிவு விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கை, கால், விரல்களை இழந்தவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டு வருகிறது.

தற்போது 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இது தேவைப்படுவோருக்கு ஏற்ற கச்சிதமான அளவில் பொருத்திக் கொள்ளவும், சம்மந்தப்பட்ட பகுதியை மூடி மறைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இது இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையில் 50 சதவீதம் மட்டுமே ஆகிறது.

இது குறித்து பி அண்டு ஓ இன்டர்நேஷனல் பிரைவேட் லிட்., இயக்குனர் நீரஜ் சக்சேனா கூறுகையில், ‘‘3டி பிரின்டிங் கருவிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் செயற்கை உடல் உறுப்புகள் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகிறது. முன்பு இதை தயாரிக்க 2 அல்லது 3 நாட்கள் ஆகும். டிஜிட்டல் அளவீடு மற்றும் பிரின்டிங் இந்த தயாரிப்பை 3 மணி நேரத்தில் முடித்துவிடுகிறது. குறைந்தபட்சம் ரூ. 40 ஆயிரம் முதல் கிடைக்கிறது.

இது தேவைப்படும் உறுப்புகளை பொருத்து மாறுபடும். இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் குறைந்த அளவே செலவாகிறது. ஏற்கனவே 15 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தினமும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உள்பட 10 முதல் 15 பேர் வரை விசாரிக்கின்றனர். மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அளவுக்கு தரம் பராமரிக்கப்படுகிறது’’ என்றார்.

இதன் மூலம் உடல் ஊனமுற்றோர், விபத்துகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு ஒர் வரப்பிரசாதமாக இந்த தகவல் அமையும்.