கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி சாலையில் வசித்து வருபவர் சுபாபிரதா மஜூம்தார் (வயது 47). லெதர் டெக்னாலஜி படித்துள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார். அரசு ஊழியர். இவரது தந்தை கோபால் மஜூம்தார்.

தாயார் பினா 2015ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தார். பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற பின்னர் பென்சன் பெற்று வந்தார். தாய் இறந்த தகவல் தெரிந்தால் பென்சன் கிடைக்காது என்பதை சுபாபிரதா அறிந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து பென்சன் பெற ஒரு திட்டம் தீட்டினார். பினா இறந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். ரசாயனம் பயன்படுத்தி உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தார். அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதந்தோறும் ரூ. 50 ஆயிரம் பென்சனையும் பெற்று வந்தார்.

இவரது இந்த மோசடி வேலை வெளியில் கசிந்துள்ளது. தகவலறிந்த போலீசார் இவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ‘மம்மி’ போல் தாய் உடலை வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இதேபோல் ஓய்வூதியம் பெற்று வரும் தனது தந்தை இறந்தாலும், அவரது உடலையும் பதப்படுத்தும் வகையில் குளிர்சாதன பெட்டி தயார்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.