மும்பை:

வீடியோகான் முறைகேட்டுவழக்கில் ஐசிஐசிஐ சிஇஒ உறவினர் ராஜீவ் கொச்சாரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஐசிஐசிஐ  சிஇஒ சாந்தா கொச்சார்

வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் தமைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்துக்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கியிருந்தன. இந்த கூட்டமைப்பில் ஒரு வங்கியான ஐசிஐசிஐ வீடியோகான் குழுமத்துக்கு கடனின் ஒரு பகுதியாக ரூ.3,250 கோடியை அளித்திருந்தது.

அதற்கு முன்னதாகவே கடந்த 2010-ம் ஆண்டு வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத், தீபக் கொச்சார் மற்றும் அவரது இரண்டு உறவினர்களுடன் சேர்ந்து உருவாக்கிய நியூபவர் ரெனுயூவபல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.64 கோடியைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து கடன் கிடைத்த 6 மாதத்துக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் உரிமை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஐசிஐசிஐ சிஇஒ சாந்தா கொச்சாரின் கொழுந்தனார் ராஜீவ் கொச்சாரை மும்பை விமானநிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவர் தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இவருக்கு சிபிஐ ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தது. ஐசிஐசிஐ வங்கி முறைகேடு தொடர்பாக சிபிஐ ராஜீவ் கொச்சாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சில ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.