சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
இதைத்தொடர்ந்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தலில் போட்டியிட விருப்ப முள்ளவர்களிடம் சத்தியமூர்த்தி பவனில் கடந்த இரு நாட் களாக விருப்ப மனு பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்து, டெல்லிக்கு தலைமைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் அதை பரிசீலனை செய்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்து நாளை இரவுக்குள் அறிவிப்பார்கள் என்றார்.
தொடர்ந்து பேசியவர், தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
கவர்னர் பதவியை விட்டு விலகிய தமிழிசை சவுந்தரராஜன் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் தமிழிசை போட்டியிட்டால், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம் என்று விமர்சித்ததுடன், மூழ்கும் கப்பலில் ஏறியிருக்கிறது என்றவர், ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர் என்றும் விமர்சனம் செய்தார்.