தேனி: இடுக்கி மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழந்துள்ளது வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரை ஒட்டி உள்ள வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. அந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, மான், புலி, காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மூணார் சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் அங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய அணைகளில் படகு சவாரி செய்தவாறு வனப்பகுதியில் உலா வரும் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதும் புகைப்படம் எடுத்து மகிழ்வதும் வாடிக்கை.
அதிலும் குறிப்பாக மூணாறில் வனப்பகுதிகளை ஒட்டி புல்வெளிகளில் காட்டு யானையின் கூட்டம் அதன் குட்டிகளுடன் விளையாடும். அதன் அழகை கண்டு ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணார் பகுதிக்கு வருவர். சில நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும். அப்போது கிராம மக்கள் வனத்துறையினர் உதவியுடன் அவைகளை காட்டுக்குள் அனுப்பி வைப்பர்.
இந்த நிலையில், மூணாரை அடுத்துள்ள தேவிகுளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டலா மற்றும் புதுக்கடி என்ற இடத்தில் அடுத்தடுத்து மூன்று குட்டி யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. முதலில் புதுக்கடியில் மூன்று வயது கருதப்படும் குட்டியானை ஒன்று சடலமாக காணப்பட்டது. மேலும் குண்டலா என்ற இடத்தில் இரண்டு வயது நிரம்பிய மேலும் 2 குட்டி யானைகள் சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குட்டி யானைகளின் தொடர் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குட்டி யானைகளுக்கு உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே குட்டி யானைகள் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மர்மமான முறையில் 3 குட்டி யானைகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் வனத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.