சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி மருந்துகள் உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவதிப்பட்டு வருகிறார். அவரை இன்று இரண்டாவது முறையாக, வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று 2வது முறையாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கோபாலபுரம் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்தார்.
karuna7_eps
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒரு மருந்து ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டது. அதனால் டாக்டர்கள் கருணாநிதியை சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இதனையடுத்து, அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வில் இருந்தார். தற்போது கருணாநிதியின் உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்கள் கருணாநிதியின் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று திருநாவுக்கரசர் 2வது முறையாக சென்று கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
ஏற்கனவே  கடந்த சனிக்கிழமையும் திருநாவுக்கரசர் கோபாலபுரம் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.