சென்னை

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 ஆம் சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தமிழக அரசு முதலாவது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்தியது.  நேற்று 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி தேதிகளை அறிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலதுக் கொண்டார்.

அவர் தனது உரையில்.

”சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்படுகிறது. உலகில் உள்ள எந்த மொழியாக இருந்தாலும், அம்மொழியில் உள்ள நல்ல எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும், அந்த படைப்புகளைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு செல்லும் விதமாகவும் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துகிறோம்.

இந்த 2023-ம் ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியைக் குறுகிய காலகட்டத்தில் நடத்தினோம். அப்போது 24 நாடுகளில் இருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றை நடைமுறைப்படுத்த மொழிபெயர்ப்பு மானியமாக ஏறத்தாழ ரூ.3 கோடியைத் தமிழக அரசு வழங்க இருக்கிறது. கருணாநிதி நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு மானியம் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.

வரும் 2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜன. 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும். அதிகமான அரங்குகளை அமைக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம்.”

எனத் தெரிவித்துள்ளார்..

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.