புதுடெல்லி:
 வங்கிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது.
bank
வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இதையடுத்து ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பின்னர், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் 4 துணை வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட் வேலை நிறுத்தத்திற்கு தற்காலிக தடை விதித்தது.  இதனால், வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய தொழிலாளர் நல ஆணையர் ,வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் என்றும் தெரிவித்தார்.