டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் , 733 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும கொரோனா பரவல் தற்போது குறைந்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 15ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையில் ஏறக்குறைய இருந்து வருகிறது. அக்டோபர் மாதம் முதலே கொரோனா குறைந்து வரும் நிலையில், தினசரி உயிரிழப்பும் கடந்த சில வாரங்களாக 500க்கும் குறைவாகவே பதிவாகியது. கடந்த 21ம் தேதி இந்தியாவில் கொரோனா காரணமாக 231 பேர் பலியாகி இருந்தனர். ஆனால், 22ந்தேதி அன்று கொரோனா உயிரிழப்பு திடீரென அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏறி இறங்கி வருகின்றன. பின்னர் 25ந்தேதி கொரோனாவுக்கு 356 பேர் உயிரிழந்துள்ளனர். 26ந்தேதி உயிரிழப்பு 585 ஆக அதிகரித்த நிலையில் தற்போது நேற்று (27ந்தேதி உயிரிழப்பு) 733 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9.00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக மேலும் 16,156 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,31,809 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மேலும் 733 பேர் சிகிச்சை பலனின்றி பலியாக உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,56,386 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 17,095 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,36,14,434 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.20 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 1,60,989 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று 49,09,254 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,04,04,99,873 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.