டெல்லி: பாலிவுட் நடிகர் ஷாருக்கான மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ரூ.25 கோடி பேரம் பேசியதாக தகவலை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய  “கிரண் கோஷாவி” தலைமறைவாக இருந்த நிலையில், புனேவில் இன்று பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இதுவரை 20 பேரைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாருக கானின் 23 வயது மகன் ஆர்யன்கானும் கைது செய்யப்பட்டார்.

அவருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கூறி வருகின்றனர். ஆர்யன்கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளjகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் ஆர்யன்கானுக்கு ஜாமின் மறுத்த நீதிபதி, சமூகத்தில் பவுர்புல்லான நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க முயலலாம் என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஆர்யன்கான் ஜாமின் மனு மும்பை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய விசாரணையின்போது,  ஆர்யன்கான் தரப்பு ஆதரவாக ஆஜரான  முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்தகி,  “ஆர்யன் கான் மீதான வழக்கு பழைய வாட்ஸ்அப் சாட்களை அடிப்படையாகக் கொண்டது. அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தவும் இல்லை வைத்திருக்கவும் இல்லை. அப்படியிருக்க அவரை கைது செய்யத் தேவையில்லை. அதாவது சிறிய அளவு போதைப்பொருளை வைத்திருந்தாலும் சரி உட்கொண்டாலும் சரி மறுவாழ்வுக்குச் செல்ல தயாராக இருந்தால், கைது செய்யத் தேவையில்லை. மேலும், சொகுசு கப்பலில் செல்லவும் அவர் டிக்கெட் வாங்கவில்லை, அவர் சிறப்பு விருந்தினராகவே கப்பலுக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்று கூறி ஜாமின் கோரியிருந்தார்..

இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த என்சிபி தரப்பு, அவர் போதைப் பொருளைப் பயன்படுத்துவர் மட்டுமல்ல கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்றனர். மேலும், அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், ஆர்யன்கானுடன் மொட்டை தலையுடன் காணப்பட்ட ஒருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர்,   ஆர்யன்கான் கைது செய்யப்பட்ட அன்று இரவு கிரண் கோஷாவி மும்பை போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று விசாரணையில் பங்கெடுத்ததாகவும் தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து, கிரண் கோஷாவியின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் நபர், முப்பை  செயில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆர்யன் கானை விடுவிக்க லஞ்ச பேரம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஷாருக்கான் தரப்பிடம் கிரண் கோஷாவி 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும். முக்கியமாக கிரண் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா டாட்லானியுடன் காரில் டீலிங் பேசியதாகவும் , இதில் 18 கோடி பெற கிரண் கோஷாவி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

கிரண் கோஷாவி  ‘தனியார் துப்பறிவாளர் என்று கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் அவர் முக்கிய சாட்சியாக கருதப்பட்டார். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்   கிரண் கோஷாவி தலைமறைவானார்.

இந்த நிலையில்தான் கிரண் கோஷாவி புனேவில் பிடிபட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. புனேவில் பிடிபட்ட இவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மும்பைக்கு அழைத்து வர உள்ளனர்.

கிரண் கோஷாவி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.ஆர்யன் கானின் பெயில் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவர் பிடிப்பட்டது  வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.