ஆள்கடத்தல் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 303 இந்தியர்களில் 276 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா-வில் இருந்து நிகரகுவாவுக்கு இவர்கள் பயணம் செய்த தனி விமானம் பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட நிலையில் ஆள்கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து விமானம் சிறைபிடிக்கப்பட்டது.
விசாரணையில் நிகரகுவாவில் இருந்து சாலை மற்றும் கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பிரான்ஸ் அரசு மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவர்கள் இருவரையும் நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவிர, 25 பேர் பிரான்சில் தஞ்சமடைய உள்ளதாக நீதிபதிகளிடம் முறையிட்டதை அடுத்து அவர்களை அகதிகளாக ஏற்று நடத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
எஞ்சிய 276 பேர் விசாரணைக்குப் பிறகு இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இன்று காலை அவர்கள் மும்பை விமான நிலையம் வந்திறங்கினர்.
மும்பையில் அதிகாரிகள் அவர்களிடம் துருதுருவித் துறுதுறுவி விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் எப்போது எப்படி ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றனர் என்றும் எதற்காக சென்றார்கள் தனி விமானத்திற்கு தேவையான பணம் எங்கிருந்து வந்தது ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணையை அடுத்து விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் பயணிகள் தங்கள் முகத்தை மறைத்தபடி வெளியேறினர்.