சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும்  511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில், மாஸ்க் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும்  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனால் கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக இடைவெளிகளை கடைபிடிக்க தமிழ்நாடு, சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மே மாதத்தில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.   தமிழ்நாட்டில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், நகர மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார இயக்குநரகத்தின் அறிவுறுத்தல்கள் விவரம் வருமாறு:-

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் மற்றும் கடும் சுவாச நோய்த்தொற்று பரவல்களை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்ட நோய் கண்காணிப்பை முடுக்கிவிடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட கண்காணிப்பு பிரிவுகள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து சுகாதார மைங்களிலிருந்தும் சுவாச தொற்று பாதிப்புகளை தொடர்ந்து தினசரி கண்காணித்து அறிக்கை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Oseltamivir) ஒசெல்டமிவிர் போன்ற வைரஸ் தடுப்பு மருந்துகள், நோயை கண்டறியும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார வசதிகளை சரிபார்க்கவும், காய்ச்சல் வார்டுகளில் போதுமான படுக்கை திறனை மதிப்பிடுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் சோப்பு அல்லது சானிடைசர்களைப் பயன்படுத்தி வழக்கமாக கை கழுவுவதையும், சுவாசப் பரவலைக் குறைக்க நெரிசலான இடங்களில் முககவசங்களை அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறையின் கள ஊழியர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

இருமல் மற்றும் தும்மலின் போது துணி அல்லது முழங்கையால் மூடிக்கொள்வதுடன் அந்த துணியை சுகாதாரமாக அப்புறப்படுத்தவும், தொற்று அபாயத்தைக் குறைக்க கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்படி கூறப்பட்டுள்ளது. சுவாச நோயின் அறிகுறிகளைக் காட்டும் நபர்களிடமிருந்து சமூக இடைவேளியை கடைப்பிடிக்கவும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமான திரவ உணவுகளை உட்கொள்வது, ஓய்வெடுப்பது, பருவகால காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன் நோய்வாய்ப்பட்டிருக் கும்போது வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசிகள், கதவு கைப்பிடிகள் மற்றும் லைட் சுவிட்சுகள் போன்ற பொதுவாகத் தொடும் மேற்பரப்புகளை தொடர்ந்து சுத்தம் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சுகாதாரம் போன்ற பொது சுகாதார செய்திகளை ஊக்குவிக்க கள ஊழியர்கள் திரட்டப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.