சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள பெண்களுக்கான பேருந்து இலவச பயண திட்டத்தின்கீழ் இதுவரை  26 கோடி பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு பலன் அடைந்துள்ளனர் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  அரக்கோணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக இருந்தது. ஆனால், தற்போது, கொரோனா இருக்கும் இடத்தைக்கூட  தெரியாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இப்போதும்  1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயாராக உள்ளது. அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு அறிவித்த பெண்களுக்கான திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியவர், பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டத்தின் கீழ், இதுவரை  அரசு டவுன் பஸ்களில்  26 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதற்காக போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஏழை மக்களின் 100 நாள் வேலை திட்டத்தை  150 நாளாக உயர்த்த முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியதுடன், திமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களை வேண்டிக்கொண்டார்.