சென்னை:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வில் தமிழகத்தில் 2,557 அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்.


இந்த ஆண்டு  11,333 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 1,143 பேர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6,297 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 1,414 பேர் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர்.

நீட் தேர்வில் மொத்தம் 2,557 பேர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 9,154 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,337 பேர் நல்ல மதிப்பெண் பெற்றனர்.

* அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி படித்து 300 முதல் 400 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 5 பேர்.

* அரசு ஆங்கில வழிக் கல்வியில் படித்து 300-400 வரை மதிப்பெண் எடுத்தவர்கள் 23 பேர்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 400-க்கும் அதிகம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 2 பேர்.

* தனியார் பள்ளிகளில் இருந்து 57,228 பேர் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர்.

* அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 1,23,078 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 59,785 பேர் நல்ல மதிப்பெண் பெற்றனர்.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சியும் இரட்டிப்புக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழக மாணவர்கள் பெற்றோர் நல சங்கத் தலைவர் எஸ்.அருமைநாதன் கூறும்போது, பிளஸ் 1 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.