சென்னை: தமிழ்நாட்டில்  நடைபெற்று முடிந்த மருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என மருத்துவத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான தேர்வு  ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு 24,000 மருத்துவர்கள் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. ஏற்கனவே கொ ரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய வர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட இருப்பதால், மதிப்பெண்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிப் பார்க்கும் பணிகள் நடக்கின்றன. 10 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில்,  எந்தெந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவர் இடங்கள் தேவைப்படுகிறதோ அந்த விவரங்கள் மற்றும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அவசியம் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் என்றார்,   முடிந்தால் முன்னாள் கவர்னர்  தமிழிசை, மத்திய அமைச்சர் நட்டாவிடம் எடுத்து சொல்லி, தமிழகத்துக்கு 6 மருத்துவக் கல்லூரிகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.

இவ்வாறு அமைச்சர்  தெரிவித்தார்.