உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி நிலைமை என்னவாக இருக்கும் என்று பினோலஜி வென்சர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

59176 ரூபாய் சராசரி மாத வருமானமுள்ள 3 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடித்து குடும்பம் நடத்த முடியாது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மாதம் 21,391 ரூபாய் மளிகை, காய்கறி, பால், கேஸ், மின் கட்டணம், குழந்தைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செலவாவதாகவும் 9,547 ரூபாய் இ.எம்.ஐ.யாக செலவாவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவசர தேவைக்கு பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தியர்கள் திடீரென வேலையிழக்க நேரிட்டால் கடனுக்கான இ.எம்.ஐ. கட்டமுடியாமல் கடனாளிகளாக ஆவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

30 முதல் 40 வயதுடைய இந்தியர்கள் மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை குறித்து அறிந்திருந்தாலும் அது பெரும்பாலும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதாகவே உள்ளது.

இதனால் வேலையிழப்பை சந்திக்கும் இவர்கள் மருத்துவ காப்பீடும் இல்லாமல் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று கணித்துள்ளது.

29 சதவீதம் பேர் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 12000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அதே நாளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு சென்றுவிடுவதாகவும் மீதமுள்ள தொகை ஒரு சில நாட்களுக்கே எஞ்சி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பெரும்பாலானோர் தாங்கள் வாங்கும் சம்பளம் 15 நாட்களில் செலவாகி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரில் ஒரு இந்தியர் தாங்கள் வைத்திருக்கும் சொத்தை விட இரண்டு மடங்கு கடன் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலையிழப்பு ஏற்படும் பட்சத்தில் கடனை எப்படி திரும்ப அடைப்பீர்கள் என்று அவர்களிடம் கேட்டதற்கு. தங்கள் முதலீடுகளை விற்று கட்டிவிடுவோம் என்று 57 சதவீதம் பேரும், 24 சதவீதம் பேர் வேறு இடத்தில் கடன் வாங்கி அடைப்பதாகவும், 5 சதவீதம் பேர் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கட்டுவதாகவும், 15 சதவீதம் பேர் கட்டாமல் விட்டுவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.