சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 177 பகுதிகளில் 354 பேர் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட Salem Covid Care Center-ன் கட்டுமானத்தின் இன்றைய நிலையை ஆய்வு செய்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுத்திடவும், ஊரடங்கினை கண்காணித்திடவும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தனியாக உள்ளார்களா என்பதை கண்காணிக்கவும், கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உடல்நலனை கண்காணிக்கவும், சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 பேர் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுவினர் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் தங்களுக்கு உடல்நலக்குறை அறிகுறிகள் ஏற்பட்ட உடனே மேற்கண்ட மையங்களுக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, பெருந்தொற்றில் இருந்து விடபட உரிய சிகிச்சை மேற்கொள்ளலாம்.