டில்லி

ந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2360 அரசியல் கட்சிகளில் 2301 கட்சிகள் அதாவது 98% அங்கீகாரம் பெறாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தாக வேண்டும் என்பது கட்டாயமாகும்.   தேர்தலில் அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் மற்றும் வெற்றி பெறும் தொகுதிகள் அடிப்படையில் அக்கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த அங்கீகார வரம்பு மாநிலக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாறுபடுகிறது.   அவ்வகையில் கட்சிகள் குறித்து இந்தியத் தலைமைத்  தேர்தல் ஆணையம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி கடந்த 2010 ஆம் ஆண்டு 1112 கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதாவது இதுவரை இந்தியத் தலைமைத்  தேர்தல் ஆணையத்தில் 2,360 கட்சிகள் பதிவு செய்துள்ளன.  இவற்றில் 2,301 கட்சிகள் அங்கீகாரம் பெறாதவை ஆகும்.  விகிதாச்சார அடிப்படையில் சுமார் 98% அரசியல் கட்சிகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை.