சென்னை: திமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்பட 23 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் தற்போது முதல் பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. நடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு ,இன்று கூடியுள்ளது.
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து சிரமப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கும், திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கும் கண்டனம் தெரிவித்ததது உள்பட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் உற்சாகம் களைகட்டியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில், சென்னை மழை வெள்ளம், தென்மாவட்ட பெருமழையினால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் முன்மொழியப்பட அவற்றை எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை எனக் கூறி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ஆவின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றையும் சுட்டிக் காட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றுடன் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த திர்மானங்கள் பெரும்பாலானவை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளன மிக்ஜாம் புயல் தொடர்பாக திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அரசுக்கு எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தீர்மானங்களின் விவரம் :
* வடகிழக்குப் பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், காலத்தே மீட்புப் பணிகளை எதிர்கொள்ளாமலும் மக்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியதோடு, புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கும் கடும் கண்டனம். பெளருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்.
* சட்டப்பேரவை நடவடிக்கைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கண்டனம்.
* சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கும், திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கும் கண்டனம்.
* ஈழத் தமிழர்கள் நலன் காக்க, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
* நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க 2320 பொதுக்குழு உறுப்பினர்கள், 235 செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இதில் பெரும்பாலோர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தம்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, பால் கறி கூட்டு, வத்த குழம்பு, மோர் குழம்பு, அடை பிரதமன் பாயாசம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 20 வகை உணவுகளுடன் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.