கோவை: கோவை, நீலகிரி, கூடலூர் ஆகிய மாவட்டங்களைக்கொண்ட கோவை வன மண்டலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் 219 யானைகள், 2011 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக ஆர்டிஐ தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் வன உயிரின ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அருகே உள்ள பீளமேடு பகுதி வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர், யானை-மனித மோதல்கள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கீழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்திற்கு தகவர் உரிமை ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவிக்கிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை வன மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, கூடலூர் ஆகிய 3 வனக்கோட்டங்களில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான சுமார் 10 ஆண்டுகளில், யானை-மனித மோதல்களில் 219 யானைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 153 யானைகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடலூர் வனக்கோட்டத்தில் 57 யானைகளும், நீலகிரி வனக்கோட்டத்தில் 9 யானைகளும் உயிரிழந்துள்ளன.
அதுபோல, கோவை வனக்கோட்டம் பகுதியில், யானை மனிதர்கள் இடையே அதிக மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக கடந்த 2010 ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் கோவை வனக்கோட்டத்தில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்தில் 75 பேரும், நீலகிரி வனக்கோட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊருக்குள் வரும் யானைகளை விரட்டும் பணியில் கோவை வனக்கோட்டத்தில் 125 வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், கூடலூர் வனக்கோட்டத்தில் 116 பேரும், நீலகிரி வனக்கோட்டத்தில் 43 பேரும் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், யானை வழித்தடங்கள், வன ஆக்கிரமிப்பாளர்கள் யார், வன ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை, சுற்றுலா நிதி பயன்பாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தகவல் ஆணையம் பதில் தெரிவிக்க மறுத்துள்ளது என்று ஆர்டிஐ ஆர்வலர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.