சென்னை,

மிழகம்… 21 ஆயிரம் கோடி வட்டியால் தள்ளாடுகிறது என்று தி.மு.க.வைச் சேர்ந்த மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு கடந்த 2002ம் வருடத்தில் , ‘பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டம்’  என்பதை நிறைவேற்றி, இதை ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி கிடைக்கும் என தெரிவித்தது. இதை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழக அரசும்  ஏற்று 2003ல் சட்டம் நிறைவேற்றியது. இதன்படி வருவாய் கணக்கில் நிதி குறையக்கூடாது. ஆனால் அதை பெரிய அளவில் மீறியதால் தமிழக வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகரித்தது.

2006 – 2011 வரை திமுக ஆட்சியில் கருணாநிதி  முதல்வராக இருந்தபோது, அந்த ஐந்து வருட மொத்த வருவாய் கணக்கில் 1,300 கோடி மிகையாக இருந்தது. அதற்கு மேல் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கி, மிகையாக இருந்த 1,300 கோடியையும் சேர்த்து முதலீடு  செய்யப்பட்டது. ரூபாய் மதிப்பு என்பது 2011ல் 1 என்பது தற்போது 2 ஆகும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011 – 2016 வரை, 5 ஆண்டில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி கடன் பெறப்பட்டது.  அதில் 50 சதவீதம் வருவாய் பற்றாக்குறைக்காக வாரி இறைத்து காலி செய்துவிட்டார்கள்.

வாங்கிய  கடனை முழுமையாக முதலீடு செய்தால்தான், அதன் மூலம் லாபம் கிடைத்து, திருப்பி செலுத்தவும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

திமுக ஆட்சியில் ஓராண்டு செலவு என்பது ஆண்டு வருவாய்க்குள் முடித்துக் கொள்ளப்பட்டது. அதற்கு வாங்கிய  கடன் முழுமையாக முதலீடு செய்யப்பட்டது. அதன் மூலம் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறின.

ஜெயலலிதா ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை மிதமிஞ்சி அதிகரித்தது.   வாங்கிய கடனை முழுமையாக முதலீடு செய்யாமல், வருவாய் பற்றாக்குறை கணக்கில் சேர்த்து விட்டனர். முதலீட்டுக்காக வாங்கிய கடன் எந்த பயனும்  கிடைக்காத  வகையில் வீண் செலவு செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் வருடம்தோறும் வருவாய் 15 சதவீதம் அதிகரித்தது. இது 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த முதல் 3 ஆண்டுகளில் 12 சதவீதமாக குறைந்தது. 2014  முதல் 5 சதவீதமாக சரிந்தது. இதன் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாயை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் மிக மோசமான நிலைக்கு படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது. வருவாய் பற்றாக்குறை இருக்கும்போது  செலவினங்களை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.

அரசு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி வரை தான் வட்டி கட்டப்பட்டு வந்தது.

இந்த வட்டி பல மடங்கு அதிகரித்து, கடந்த ஆண்டு 21 ஆயிரத்து 600  கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் மிக மோசமான நிர்வாக கோளாறினால் அரசு நிதி நிலை வரலாறு காணாத அளவில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு, தமிழகம் தள்ளாடுகிறது.

வளர்ச்சித்திட்டங்கள்  எதுவும்   நிறைவேற்றப்படவில்லை.

அவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை. இதை மக்களும் நன்கு அறிந்திருக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கஜானா காலியாகி மக்களின் அடிப்படை வசதி, வளர்ச்சி  திட்டங்களை நிறைவேற்ற முடியாது. அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் போடுவதற்கே திண்டாட வேண்டியிருக்கும்.

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடு 4 மில்லியன் டாலருக்கு மேல் இருந்து, தற்போது 2.1 சதவீதமாக அதாவது பாதி அளவுக்கு குறைந்து விட்டது.  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் வரலாறு காணாத பெரும் பின்னடைவை சந்திக்கும் அபாயம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் வரலாறு காணாத பெரும் பின்னடைவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.