சென்னை:

கொரோனாவில் உயிரிழந்த பிரபல நரம்பியல் நிபுணரின் உடலை  அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 21 பேரும் புழல்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.

அவர்கள் அனவைரையும் வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.  டாக்டர் சைமன் ஹெர்குலஸ். இவர் கொரோனா நோயால் உயிரிழந்த நிலையில்,  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய, சக டாக்டர்கள் மற்றும் உறவினர்கள், டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள, கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றனர். அருகில் வசிக்கும் மக்கள், கொரோனாவால் இறந்தவர் உடலை, இங்கு அடக்கம் செய்தால், எங்களுக்கும் நோய் பாதிக்கும் எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி, நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலங்காடு மயான பூமிக்கு எடுத்துச் சென்றனர்.

தகவல் அறிந்து, அதன் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதி மக்கள், அங்கு கூடினர்; அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அண்ணா நகர் போலீசார், பொது மக்களிடம் பேச்சு நடத்தினர். மாநகராட்சி ஊழியர்கள், உடலை அடக்கம் செய்வதற்கான, பணிகளை துவக்கினர். அப்போது, திடீரென ஒரு கும்பல், மாநகராட்சி ஊழியர்கள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும், கல் மற்றும் கட்டைகளை வீசி, தாக்குதல் நடத்தியது. ஆம்புலன்ஸ் வாகனத்தின், கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடுமையான சம்பவத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. மருத்துவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். நாங்கள் பணியாற்றாவிட்டால், உங்களுக்கு உயிர் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள் என எச்சரிக்கை செய்தனர்.

இதுதொடர்பாக   மாநகராட்சி 102வது வட்டம் உதவி பொறியாளர் கலையசரன் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து வேளாங்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது 188- (ஊரடங்கை மீறுதல்), 269- (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145- (சட்டவிரோதமாக கூடுதல்), 341- (சிறை பிடித்தல்), 294 (பி)- ஆபாசமாக திட்டுதல், 353- (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட வள்ளி, மகாதேவ், சத்தியா, சின்னபொண்ணு, மாலதி, சரசு, சுதாகர், யூனுஸ், ஏட்டையா, புருஷோத்தமன், ரமேஷ், தமிழா, சுந்தர், ரவி, மஞ்சுளா உள்பட 21 பேர் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைந்தனர்.