புதுச்சேரி:
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி முன்னாள் திமுக முதல்வர் ஜானகிராமன் (வயது 78 ) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கழக முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1996ம் ஆண்டு மே 26 முதல் 1999ம் ஆண்டு மார்ச் 18 வரை புதுச்சேரி மாநில முதல்வராக பதவி வகித்தவர் ஆர்.வீ.ஜானகிராமன். தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் அடக்ம் இன்று காலை மரக்காணம் ஆலந்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை ஜானகிராமனின் உடல் அலங்கரிக்கப்பட் வண்டியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஆலத்தூர் கிராமத்தில் நல்ல அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனின் மறைவையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.