டில்லி:

ரும் ஜூன் 17ந்தேதி 17வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற  எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் வகையில்,  இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை  தக்க வைத்துள்ளது. இதையடுத்து வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் புதிய சபாநாயகர் தேர்தல் மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவேண்டியதிருப்பதால்  17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 17ந்தேதி தொடங்கும் மக்களவையை நடத்த இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதையடுத்து, வரும்  19–ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு  நடைபெறும். அதைத்தொடர்ந்து வரும்  20–ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.  தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டத்தொடரின்போது ஜூலை 5ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படகிறது. தொடர்ந்து  ஜூலை 26–ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்‘பட்டுள்ள வீரேந்திர குமார் எம்.பி. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.