சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட  மூத்த தலைவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைமை அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், இதுதொடர்பாக  திமுக தரப்பில் இருந்து எந்தவொரு  அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை, தனது பழைய  கூட்டணியை  தொடர்வதும்   கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, , ஆளும் திமுக மாநில கட்சி பிரிவுகளை ஏழு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த தலைவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைமை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 அதன்படி,  திமுக முதன்மைத் தலைமை நிலையச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ. ராசா மற்றும் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் ஈ.வெ. வேலு மற்றும் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் மண்டலங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் அறிவாலயம் வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சமீபத்தில்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில்,  நடைபெற்ற கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,  திமுகவின், நான்கு ஆண்டு கட்சி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க 1,244 கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.  அத்துடன்  மண்டல தலைவர்கள் நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்,   திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தனது சொந்த ஊரான திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் பிற டெல்டா மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகியவற்றை உள்ளடக்கிய மண்டலத்திற்குப் பொறுப்பாளராக இருப்பார்.

திமுக எம்.பி.யும்,  கட்சி துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா சென்னை மண்டலத்தின் தேர்தல் விவகாரங்களைக் கவனிப்பார். இந்த மண்டலத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களும் அடங்கும்.

தூத்துக்குடி எம்.பி மற்றும்  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குத் தலைமை தாங்குவார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குப் பொறுப்பாளராக இருப்பார்.

மூத்த அமைச்சர் ஈ.வெ. வேலு திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் பிற வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் தேர்தல் விவகாரங்களை நிர்வகிப்பார்.

மாநில உணவு அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆர். சக்கரபாணி மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மண்டலங்களுக்குத் தலைமை தாங்குவார்.

சமீபத்தில் அமைச்சரவையிலிருந்து விலகிய வி. செந்தில்பாலாஜி, கோவை முதல் தனது சொந்த ஊரான கரூர் வரை மேற்கு நோக்கி மற்றும் வடமேற்கில் சேலம், தருமபுரி வரை நீண்டு செல்லும் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.