டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான அஜோய் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்  செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்வக்குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம்   2024 நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி நிலவரம், தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியளார்களிடம் பேசிய மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும்  திமுக – காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.