சென்னை: 2024 ஆங்கில புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

2023-ஆம் ஆண்டு முடிந்து 2024-ஆம் ஆண்டு நள்ளிரவு தொடங்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் #2024-ஐ வரவேற்கிறேன்!

புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன்  பிறக்கிறது இனிய புத்தாண்டு! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, ‘பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’, மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி செய்து வருவதையும்; கழக ஆட்சிக் காலங்கள் ‘தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்’ என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி,பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாளைய தினம், 2024 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறோம். தமிழகம் முழுவதிலிருந்துமே, பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைக்க, ஜாதி, மதப் பாகுபாடுகள் இல்லாமல் ஆதரவுக் கரங்கள் நீண்டன. நம் மக்களின் இந்த இயல்பான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். பல ஆயிரம் கோடிகள் நம் வரிப்பணத்தைச் செலவு செய்தும், எந்தத் தவறுமே செய்யாமல் ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் நாம் பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி, முதன்முறையாக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும். பல ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை வெளிப்படையாக ஊழல் மூலம் கொள்ளையடித்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்தவர்கள், நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை, நமது நீதித்துறை இந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருக்கிறது. மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் அனைவருக்குமே நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இனியொரு முறை ஊழல் செய்யும் முன்பு, இதற்கான தண்டனை நிச்சயம் என்ற எண்ணம், ஊழல்வாதிகள் மத்தியில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. மக்கள் வரிப்பணம் இனி மக்களுக்கே பயன்பட வேண்டும். மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி, பாரத மக்களின் பேராதரவுடன், மூன்றாவது முறையாக வரும் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. கடந்த பத்து ஆண்டுகளாக, விவசாயிகள், மீனவர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் என கோடிக்கணக்கான பொதுமக்கள் பலனடைந்துள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் வரும் ஆண்டுகளிலும் தொடரும். வரும் 2024 புத்தாண்டு, தமிழகத்திலும், நேர்மையான, பொதுமக்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் மாற்றத்திற்கான நல்லாண்டாக உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் வாழ்த்துச் செய்தியில்,  மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாக தலைவர் ஜி.கே.வாசன், 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெறவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மத்திய, மாநில அரசுகளும், பொது மக்களும் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

மதிமுக வைகோ,  மலரப் போகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  நாம் கடந்து வந்த கரடு முரடான பாதைகள் முடிவுக்கு வந்துவிட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024-ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்…. அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

அன்புமணி ராமதாஸ்:- தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். கமல்ஹாசன் பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.