மதுரை: பொதுமக்களின் பல ஆண்டுகள் கனவான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  கட்டுமானப்பணிக்கான  டெண்டர் ஜனவரி 2ந்தேதி  இறுதி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங்  தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டகளாக கிடப்போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று  மத்தியஅரசு  தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாட்டு ஒப்பந்தங்களின்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அக்டோபர் 2026 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் , பின்னர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத தொற்று நோய் தடுப்புப் பிரிவு தொடங்கப்படும். இந்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவுக்காக வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட வேண்டியுள்ளதால், கட்டுமான மதிப்பீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளுக்கான முழு திட்டத்துக்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு, திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜன. 2-ம் தேதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்படும். இது தமிழக மக்களுக்கு, மத்திய அரசு அளிக்கும் புத்தாண்டுப் பரிசாக இருக்கும்.

உலக அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதால், பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய நிறுவனங்களும் டெண்டர் கோரலாம். எய்ம்ஸ் டெண்டரில் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மை இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராக திமுக-வினர் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். மதுரை எய்ம்ஸ்-க்கு நான் தான் முழு பொறுப்பு. இந்த திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றார்.