சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டின் முதல் மாதத்தில், அதாவது ஜனவரியில் தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால், உலக முதலீட்டாளர்கள் மாநாடு , முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் உள்பட காரணங்களால், சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 12ந்தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். அதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகை சென்று சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, இன்று காலை ஆளுநர் உரையின் பேரவை கூட்டத் தொடங்குகிறது. இன்று 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர்.
இதனையடுத்து ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு ஆளுநருக்கு அளிக்கப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குகிறது.
காலை 10.02 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க தொடங்குவார். ஆங்கிலத்தில் இருக்கும் அந்த உரையானது சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக சட்டப்பேரவை தொடரில் பேசப்படும் ஆளுநர் உரையும் முக்கியத்துவம் பெறும். காரணம் அதில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆளுநர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இதற்கு மறுநாள் 20 ஆம் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் துறையின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்பின்னார் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதேசமயம் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விவாதம் நடைபெறும் நிலையில் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார். இத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெறும். இதற்கிடையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி விவாதம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளது.
கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையில் சில வார்த்தைகளை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இப்படி பல சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு சுமூகமாக சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.