புதுடெல்லி: புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்வதற்கு 2022 என்பது இலக்காக எப்போதுமே இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
அவர் கூறியுள்ளதாவது, “ரயில்வே துறையில் தேவையான இடங்களில் தனியாருக்கு வாய்ப்பு தரப்படும். அதேசமயம், இந்திய ரயில்வே என்பது எப்போதும் அரசினுடையதாகவே நீடிக்கும். இதுதொடர்பாக தொடர்ந்து தவறான புரிதல் நிலவி வருகிறது.
2022ம் ஆண்டிற்குள் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்வது குறித்த இலக்கு எப்போதும் இருந்ததில்லை. அந்த காலகட்டத்தில் சிலவிதமான பணிகள் செய்து முடிக்கப்படும். கடந்த பல ஆண்டுகளில் ரயில்வே துறை பலவிதங்களில் மேம்பட்டுள்ளது.
விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை இன்னும் பல விதங்களில் சிறப்புற வேண்டியுள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு, பயணிகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சிறப்பான சேவைகள் போன்ற விவகாரங்களில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் ரயில்வேயில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. அதேசமயம், மின்மயமாக்குதலை நாம் விரைவுபடுத்தி பணியை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும்” என்றார்.