மதுரை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 71அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியுள்ளது.  இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 2000 கணஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. . அணையின் 7 சிறிய மதகுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வருகின்ற 5ம் தேதி வரை  திறக்கப்படும் என்றும்,  அடுத்த 5 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து 619மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மதுரை மாவட்ட பாசனத்திற்கு வருகின்ற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.