சென்னை: அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும்  திறக்கப்பட்ட 2ஆயிரம் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை  வேப்பேரியில், பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.  அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்துவிட்டால் அவர்கள் வெளியில் வரலாம் என்றார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள கோவை, செங்கல்பட்டிலும் மருத்துவ குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடநத் அதிமுக ஆட்சியில்  தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன.  2,000 மினி கிளினிக்கு களை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. இந்த கிளினிக்குகளில் செவிலியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததாலும், மினி கிளினிக்கில் நியமிக்கப்பட்டிருந்த மருத்துவர்கள் கோவிட் பணியில் உள்ளதாலும், அதிமுக ஆட்சியில் சரி வர நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததாலும் அவைகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.

சேலத்தில் ‘அம்மா கிளினிக்’: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்…