சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின்  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று காலை 5 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக அதிகரித்தது. இன்று மாலைக்குள் 120 அடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அmணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரை கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுபோல, மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக இந்த நீர் திறக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தியும் தொடங்கி யுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.