ஸ்ரீநகர்

தீவிரவாதிகள் தாக்குதலில் ஸ்ரீநகரில் இரு பள்ளி ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விதி எண் 370 ரத்து செய்யப்பட்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.  மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.  ஆயினும் அங்குத் தீவிரவாதிகள் தாக்குதல் முழுமையாகக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் அங்கு இரு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.  ஸ்ரீநகர் ஈட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது இவர்கள் உயிர் இழந்தனர்.  இவர்களில் ஒருவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆவார்.

இதற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

தற்போது காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.   பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு மற்றும் 370 பிரிவு ரத்து ஆகியவற்றால் குறையும் எனக் கூறினார்.  ஆனால் பயங்கரவாதம் நிறுத்தப்படவில்லை..  

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.   காஷ்மீரில் உள்ள சகோதர சகோதரிகள் மீதான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.   உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனத் தெரிவித்துள்ளார்.