சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு இருவர் பலியாகியுள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தசம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை, நேற்று மாலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பெரும்பாலான இடங்கள் மழைத நீர் தேங்கியது. இருந்தாலும், மேயர் உள்பட அதிகாரிகள் நள்ளிரவே வீதி உலா வந்து, மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கி விட்டதால், இன்று காலை பல இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்றும், கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால், சென்னை மாநகராட்சிக்கும், தமிழகஅரசுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இருந்தாலும் கனமழை விட்டு விட்டுப் பெய்து வருவதால் மழைநீர் தேங்கி வருவதுடன் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக இருவர் பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான தேவேந்திரன் என்பவர் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்தை அறியாமல் மிதித்த தேவேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
அதுபோல, சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது தொடர் மழையின் காரணமாக ஈரத்தில் ஊறிய பால்கனி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய சாந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…