ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டு உள்ளது. தென்மாவட்ட கடற்கரை பாதுகாப்பு பணியில் இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்த பருந்து கடற்படை வானூர்தி தளம் (INS Parundu)  தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சேர்வைகாரன் ஊரணி ஊருக்கருகே அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும்.

முன்னதாக இந்த  உச்சிப்புளி பகுதியானது, இரண்டாம் உலகப் போரின் 3000 அடி நீளமுடைய விமானத்தளமாக செயல்பட்டது. பின்னர், அதை கடற்படை தன்வசப்படுத்தி கடற்படை தளமாக 1982ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்தது. இது உச்சிப்புளியில் கடற்படை தளமாக செயல்பட்டு வந்தது.  பின்னர், இது  கடந்த 2009ம் ஆண்டு, ஐ.என்.எஸ். பருந்து  என பெயரிடப்பட்டு, கடற்படை விமான தளமாக தரம் உயர்த்தப்பட்டது  இந்த நிலையத்திற்குபெயரிடப்பட்டது.

இங்கிருந்து கடற்படையினர  பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை உள்ளிட்ட பகுதிகளில்  கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ்  செயல்படுகிறது. இதன் மூலம் தென்மாவட்ட கடற்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பருந்து கடற்படை தளத்தில்,  ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த நிலையில், தற்போது மேலும் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம்,  மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க ரோந்து பணியில் இந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.