திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது. இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆந்திரம், கா்நாடகம், அரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கு சென்று 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குஷரத்பாஷா (வயது43) என்பவரையும், அசாம் மாநிலம் லைலா பைபாஸ் ரோடு லால்பூர் பகுதியை சேர்ந்த அப்சர் உசேன் (23) என்பவரையும் கோலார் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குஷரத் பாஷா கொள்ளையர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய உதவியதும், அப்சர் உசேன் கொள்ளையர்களுக்கு கோலாரில் ஒரு விடுதியில் தங்க அறை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோலாரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.