சென்னை: கொரோனா தனிப்படுத்தலின்போது, இரண்டு பெண் டாக்டர்களிடம் பாலியல் சேட்டை செய்த 2 ஆண் டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி, சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் வக்கிர மனப்பான்மைக்கு மாற்றி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் பாலியல் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள்  உள்பட என அனைத்து தரப்பு பெண்களிடமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் மதிப்புமிக்க முன்களப்பணியாளர்களான மருத்துவர்களும், பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், சென்னை அரசு மருத்துவமனை பெண் டாக்டர்கள் இருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து,   பலாத்காரம் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் இருவரை, போலீசார்  அதிரடியாக கைது செய்தனர்.

கொரோனா தொற்று பரவலின்போது, சென்னையில் உள்ள ஒரு பிரபல  தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தலுக்காக தங்கியிருந்த பெண் மருத்துவரை, உடன் பணிபுரியும் மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர், அத்துமீறி  வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அதுபோல, இன்னொரு அறையில் தங்கியிருந்த மற்றொரு பெண் மருத்துவரிடம், உடன் பணிபுரியும் மருத்துவர் மோகன்ராஜ் என்பவர், அத்துமீறி அறைக்குள் நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார்களில் கூறப்பட்டு உள்ளது.

இருவரின் புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்புடைய இரு டாக்டர்களை பிடித்து விசாரித்ததில், பலாத்காரம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.  இருவரையும் தேனாம்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.