சென்னை:
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது. திமுக தலைமை யிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய கட்சி உள்பட மேலும் பல சிறிய கட்சிகளும் சேர்ந்துள்ளனர்.
திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்ட நிலையில், அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுக்கள் தொடர்ந்து வருகின்றன. அதுபோல கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆதரவு கட்சிகளுடன் ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் தலைமையிலான குழுவினர், இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தனர். அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள், கூட்டணிக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தா னது. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. சிதம்பரம்
2. திருவள்ளூர் அல்லது விழுப்புரம் – இந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், கூட்டணி நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில், இந்த மக்களவை தேர்தலில். தங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.