நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள “விஜய் 64” (அவரது 64வது படம்) படத்தின் ஹீரோயினாக மாலவிகா மோகனனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜும் நடிக்க உள்ளனர்.

நடிகர் விஜயை வைத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்திற்கு, இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், “விஜய் 64” என்று அப்படம் அழைக்கப்படுகிறது. இப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில், பேராசிரியராக விஜய் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. அதேநேரம், நடிகர் சாந்தனு பாக்கியராஜ், கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தது.

இத்தகைய சூழலில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ள அப்படக்குழுவினர், படத்தின் ஹீரோயினாக கேரளாவை சேர்ந்த நடிகை மாலவிகா மோகனனும், மற்றொரு முக்கிய காதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ள நடிகர் சாந்தனு, “கனவுகள் நிஜமாகும். எனக்கு மிகவும் பிடித்தமான விஜய் அண்ணாவோடு தளபதி 64ல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வாய்ப்புக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.