நாகப்பட்டினம்

பாஜக வேட்பாளரை வரவேற்கப் பட்டாசு வெடித்ததில் நாகையில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகி உள்ளன.

பாஜகவைச் சேர்ந்த எஸ் ஜி எம் ரமேஷ் என்பவர் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரமேஷை வரவேற்பதற்காகப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசுகள் வெடித்துச் சிதறிய போது, எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் இருந்த குடிசை வீட்டின் மீது விழுந்து தீ மளமளவென பரவி வீட்டின் கூரை முழுவதும் பற்றி எரிந்தது.  அத்துடன் அருகாமையில் உள்ள வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. நாகையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.